ஈரானில் கீழே விழுந்து நொறுங்கியது விமான விபத்தில் 176 பேர் பலி: உக்ரைனுக்கு சொந்தமானது

டெக்ரான்: ஈரானில் உக்ரைன் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 176 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இதில், 167 பயணிகள் சென்றனர். மேலும், 9 விமான ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் 2 இன்ஜின்களில் ஒன்றில் தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக விமானம், பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர். இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஈரானை  சேர்ந்தவர்கள். இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி, பிரதமர் ஒலக்சி ஹான்சரூக் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். விமான விபத்து குறித்து உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் வத்யம் பிரிடாகியோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘விபத்துக்குள்ளான விமானத்தில் 82 ஈரானியர்கள், கனடாவை சேர்ந்த 63 பேர், உக்ரைனை சேர்ந்த 11 பேர், ஸ்வீடனை சேர்ந்த 10 பேர், ஜெர்மனி மற்றும் பிரிட்டனை சேர்ந்த தலா 3 பேரும் பயணம் செய்தனர்,’ என கூறியுள்ளார். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏவுகணை தாக்கியதா?

ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பின்  ஒரு மணி நேரம் கழித்து, உக்ரைன் விமான விபத்துக்கு உள்ளானது. அதனால், ஏவுகணை தாக்குதலில் விமானம் சேதமாகி விழுந்து நொறுங்கியதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

Related Stories: