திறமையான வீரர்களுக்கு நிறுவனங்கள் உதவ வேண்டும்: ஜூவாலா கட்டா வலியுறுத்தல்

சென்னை: விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகள் கிடைத்தால் மட்டுமே ஒலிம்பிக்சில் நிறைய பதக்கங்கள் வெல்லமுடியும் என்று பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தெரிவித்தார். காசாகிராண்ட் கட்டுமான நிறுவனம் சார்பில் வளரும் இளம் வீராங்கனைகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தடகள வீராங்கனை ருத்திகா(சென்னை), டென்னிஸ் வீராங்கனை சுகிதா மாரூரி (பெங்களூர்), ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை அபிநய ரகுபதி (கோயம்புத்தூர்) ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலையை பேட்மின்டன் வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான ஜுவாலா கட்டா வழங்கினார்‌.

நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: வளரும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு நிதி உதவி செய்வது வரவேற்கத்தக்கது. இதேபோல் மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் தேவையான உதவிகளை செய்து தர முன்வர வேண்டும். வீரர்கள் சத்தான உணவு, தரமான பயிற்சி, உபகரணங்கள், பயண செலவுகள் என்று பல்வேறு செலவினங்களை சமாளிக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி விளையாட்டுக்காக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்வது சரியாக இருக்குமா என்ற எண்ணமும் பெற்றோர்களிடம் இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்தால் தான் நம் நாட்டில் விளையாட்டுத் துறை மேம்படும். சுமார் 130 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் ஒன்றிரண்டு பதக்கங்களுக்கு பெருமகிழ்ச்சி அடைய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

நம்மை விட அளவில் சிறிய நாடுகள் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பதக்கங்களை வெல்லுகின்றனர். தேவையான வசதிகள் தடையின்றி கிடைக்கும் சூழல் உருவானால் மட்டுமே ஒலிம்பிக்சில் பதக்கங்கள் வெல்வது சாத்தியமாகும். நாட்டில் வேலை வாய்ப்பின்மை, குற்றச்செயல்கள் குறைய விளையாட்டே சிறந்த காரணியாக இருக்கும். ஒழுக்கம், ஒற்றுமை, பிரச்னைகளை சமாளிக்கும் திறனை விளையாட்டு சொல்லித் தருகிறது. நல்ல உடல்நலத்துடன் வளமாக வாழ வழிகாட்டுகிறது. எனவே நாட்டில் விளையாட்டு துறை மேம்பட கார்ப்பரேட் நிறுவனங்களும் உதவிட முன்வர வேண்டும். நானும் எனது அகடமி மூலம் உதவிகளை செய்து வருகிறேன். இவ்வாறு ஜுவாலா கூறினார். இந்நிகழ்ச்சியில் காசாகிராண்ட்  நிறுவன துணைத் தலைவர் (சந்தை பிரிவு) ஈஸ்வர் பங்கேற்றார்.

Related Stories: