அங்காளம்மன் கோயில் பக்தர்கள் அவதி: பராமரிப்பு இல்லாததால் குடிநீர் குழாய்கள் சேதம்... நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் புகழ்பெற்ற அம்மன் திருத்தலமாகும்.  இத்திருத்தலத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் கூடுவது  வழக்கம். நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில், அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் போது பக்தர்கள் ஒன்றுகூடி அம்மனை நள்ளிரவில் தரிசிப்பது மிக சிறப்பு. இத்திருத்தலத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் அதிக அளவு மக்கள் வருகை புரிவதால்  எப்பொழுதும் பரபரப்பாக, கூட்டம் நிறைந்து காணப்படும் பகுதியாக கோயில் வளாகம் உள்ளது.

இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலில் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதி செய்து தராதது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆலயத்திற்குள் சென்று அம்மனை தரிசிப்பதற்கு முன்பாக தங்கள் முகங்களை கழுவிக் கொள்ளவும் மற்றும் அம்மனுக்கு படையிலிடும் போது சமைப்பதற்கு தேவையான தண்ணீரை பெறவும் குடிநீர் ஆதாரதமாக கோயில் நிர்வாகத்தால் ஊஞ்சல் மண்டபம் அருகே கட்டப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் முற்றிலும் சேதமடைந்து ஒரு குழாய் கூட சரியாக பயன்படுத்த முடியாமல் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இக்குழாய்களை பயன்படுத்தும் பக்தர்கள் மீது நீர் அதிகளவு வெளியேறுவதால் உடைகள் முழுவதும் நனையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் உள்ள குடிநீர் குழாய்களை ஆலய நிர்வாகம் உடனடியாக சீர்படுத்தி பக்தர்கள் பயன்பாட்டுக்கு தர வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பல கோடி வருமானம் உள்ள இத்திருக்கோயிலில் சிறிய தொகையான குடிநீர் வசதி கூட சிறப்பாக கோயில் நிர்வாகம் செய்து தராதது பெரும் அதிர்ச்சியை பக்தர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. எனவே கோயில் நிர்வாகம் உடனடியாக குடிநீர் குழாய்களை சரி செய்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பெரும்பாலான பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: