ஈரான் புதிய ராணுவ தளபதி சபதம் அமெரிக்காவை நிச்சயம் பழிவாங்குவோம்

டெஹ்ரான்: ‘‘அமெரிக்காவை நிச்சயம் பழிவாங்குவோம்’’ என ஈரான் புதிய ராணுவ தளபதி இஸ்மாயில் கானி உறுதிபட கூறியுள்ளார்.

தீவிரவாதத்துக்கு ஈரான் உதவி வந்ததால், அதனுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மற்றும் அமெரிக்க  தூதரகம் மீது தாக்குதல் நடத்த தங்கள் ஆதரவு போராளிகளை தூண்டிவிட்டது.   இதன் பின்னணியில் ஈரான் ராணுவ தளபதி ஜெனரல் காஸ்சிம் சுலைமானி செயல்பட்டார். இந்நிலையில் ஈராக்குக்கு கடந்த 3ம் தேதி வந்த சுலைமானியை (62) பாக்தாத் விமான நிலையம் அருகே டிரோன்  தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது.

இவரது உடல் நேற்று முன்தினம் ஈரான் கொண்டு செல்லப்பட்டது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள பல்கலைக்கழகத்தில் சுலைமானி மற்றும் அவருடன் இறந்த அதிகாரிகளின் உடலுக்கு ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமனே நேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். சுலைமானியன் துணை தளபதியாக செயல்பட்ட இஸ்மாயில் கானி என்பவர் ஈரானின் புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்காவின் தாக்குதலுக்கு பழிவாங்க கடவுள் உறுதி அளித்துள்ளார். பழிவாங்கும் முக்கியநபர் கடவுள்தான். அமெரிக்காவை நிச்சயம் பழிவாங்வோம்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, சுலைமானி கொல்லப்பட்டுள்ளதால் மத்தியகிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து,   நேட்டோ தூதர்கள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் நகரில் தலைமையகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர். ஈராக் பாதுகாப்பு படையினருக்கு நேட்டோ படையினர்தான் பயிற்சி அளித்து வருகின்றனர். நேட்டோ படைகள் ஈராக்கை விட்டு வெளியேறினால், பயிற்சி தொடர்வது சந்தேகம். உள்நாட்டில் உள்ள போராளிகள் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைவர். இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பருடன், நேட்டோ செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க்க போனில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அமெரிக்க வீரர்களை கொல்வோம்

சுலைமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி அமெரிக்காவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்கள் மத்தியில் பேசிய சுலைமானியின் மகள் ஜைனப், ‘‘மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், தங்களது பிள்ளைகளின் மரணத்துக்காக காத்திருக்க வேண்டும்’’ என ஆவேசமாக பேசினார்.

மூன்று அபாயங்கள்

ஈரான் கடந்த 2015ல் செய்த அணு சக்தி ஒப்பந்தத்தை கைவிட்டுவிட்டது. அதனால் அது மீண்டும் அணு குண்டு தயாரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக தீவிரவாத தாக்குதலை தூண்டும் நடவடிக்கையில் ஈரான் இறங்கலாம். ஈராக்கில் இருந்து அமெரிக்க படை வெளியேறினால், அங்கு மீண்டும் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

டிரம்ப் தலைக்கு 574 கோடி பரிசு

சுலைமானியின் உடல் நேற்று முன்தினம் மாஸாத் என்ற பகுதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த கூட்டத்தில் ஒருவர் ‘சேனல் ஒன்’ என்ற ஈரான் அரசு டி.வி.யில் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், ‘‘ஈரானில் 80 மில்லியன் பேர் உள்ளோம். ஒவ்வொருவரும் ஒரு அமெரிக்க டாலர் பணம் வழங்கினால், 80 மில்லியன் டாலர் (ரூ.574 கோடி) சேரும். அந்த தொகையை, நமது ராணுவ தளபதி சுலைமானியை கொன்ற, மஞ்சள் முடி கொண்ட அமெரிக்க அதிபரின் தலையை கொண்டு வருபவருக்கு, ஈரானின் பரிசாக வழங்கப்படும். இதற்கு சம்மதம் என்றால் கோஷமிடுங்கள்’’ என கூறினார். உடனே இதற்கு ஆதரவாக அங்கு கூடியிருந்தவர்கள் கோஷம் எழுப்பினர்.

Related Stories: