7 மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியாக 5,908 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்

* நிதி, உள்துறை அதிகாரிகள் உயர்நிலை குழுவில் முடிவு

புதுடெல்லி: அசாம், கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு, கடந்தாண்டு பேரிடர் நிவாரண நிதியாக 5,908.56 கோடி வழங்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரழிவினால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களுக்கு இடைக்கால நிவாரணத் நிதியாக மத்திய அரசு 3,200 கோடி வழங்கியது. இதில் கர்நாடகாவுக்கு 1,200 கோடி, மத்திய பிரதேசத்துக்கு 1,000 கோடி, மகாராஷ்டிராவுக்கு 600 கோடி, பீகாருக்கு 400 கோடி நிவாரணத் தொகை பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி, விவசாயம், உள்துறை அமைச்சகங்கள், நிதி ஆயோக் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து, கடந்தாண்டு இயற்கை பேரழிவினால் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்களுக்கு நிவாரணத் தொகையாக 5,908.56 கோடி வழங்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட அசாமிற்கு 616.63 கோடி, இமாச்சலப் பிரதேசத்துக்கு 284.93 கோடி, கர்நாடகாவுக்கு 1,869.85 கோடி,  மத்தியப் பிரதேசத்துக்கு 1,749.73 கோடி, மகாராஷ்டிராவுக்கு 956.93 கோடி, திரிபுராவுக்கு 63.32 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு 367.17 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட உள்ளது. 2019-20ம் ஆண்டில் 27 மாநிலங்களுக்கான மாநில பேரிடர் மீட்பு நிதிக்கு மத்திய அரசு 8,068.33 கோடி வழங்கியுள்ளது.

Related Stories: