பாகிஸ்தானில் உள்ள நன்கனா சாகிப் குருத்வாராவில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கனா சாகிப் என்ற இடத்தில் சீக்கியர்களின் முதல் மதகுருவான குருநானக் தேவ் பிறந்தார். அவர் நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. சீக்கிய மதத்தினர் அவ்விடத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி அந்த குருத்வாரா மீதும், அங்கு சென்ற சீக்கியர்கள் மீதும் மர்மநபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானில் சீக்கியர்கள் குறிவைத்து தாக்கப்படுவது கடும் கண்டனத்திற்கு உரியது’ என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் காங்கிரஸ் இளைஞர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ‘டீக்கடையில் நடந்த மோதலால் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த 2 குழுக்கள் மோதிக்கொண்டன.இதில் போலீசார் தலையிட்டு குற்றவாளிகளை கைது செய்தனர். இதை மதரீதியான தாக்குதல் என வதந்தி பரப்பும் முயற்சிகள் நடக்கின்றன. குருத்வாராவுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள சம்கனி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சீக்கிய இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் மர்மநபர்களால் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குருத்வாரா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவராக கூறப்படும் இம்ரான் என்பவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: