மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டு நகல்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது?: ஆய்வு செய்ய தமிழக தொல்லியல்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டு நகல்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்று ஆய்வு செய்ய தமிழக தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மைசூரில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள தமிழ் கல்வெட்டு மசிப்படிகள் ஆவணப்படுத்தப்படவில்லை என்று உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பொதுநல வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தமிழ் கல்வெட்டுகள் பராமரிப்பின்றி தமிழ் வரலாறு அழிக்கப்படுவதாக வாதிட்டார். மேலும் மைசூரில் உள்ள தொல்லியல்துறையின் தமிழ் கல்வெட்டு மசிப்படிகளின் நகல்களை தமிழக தொல்லியல்துறையிடம் ஒப்படைக்கவும் கோரிக்கைவிடுத்தார். இதையடுத்து, இந்தியாவில் கிடைத்துள்ள ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 66 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 1800ம் ஆண்டில் இருந்து சேகரிக்கப்பட்ட கல்வெட்டு மசிப்படிகள், மைசூரு அலுவலகத்தில் கவனிக்கப்படாமல் அழியும் நிலையில் உள்ளன. ஆதலால் உடனே கல்வெட்டு மசிப்படிகளை ஆவணப்படுத்தி மக்களுக்கு தமிழ் வரலாறு தெரியும் வகையில் புதுப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.  இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. வாதத்தை கேட்ட நீதிபதிகள் தொடர்ந்து, மைசூரில் உள்ள கல்வெட்டு படிகளை தமிழகத்திடம் ஒப்படைப்பது குறித்து 21ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மதுரை கிளை உத்தரவிட்டது.

Related Stories: