தமிழகத்தில் மேலும் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முதல்கட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கியதாக தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் மேலும் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முதல்கட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரியலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்குவது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓரிரு நாள்களில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நிர்வாக குழுவின் பரிசீலனைக்கு இந்த விவகாரம் அனுப்பப்பட உள்ளது. அதற்கு அக்குழு இறுதி அனுமதி அளிக்கும்பட்சத்தில், புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு ஒப்புதல் கிடைக்கப் பெற்றால் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 37 ஆக உயரும். இதன் காரணமாக நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவாகக்கூடும். தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 அரசு மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. திருப்பூர், உதகை, நாமக்கல், திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளுர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய மருத்துவ கல்லூரி அமைக்க ரூ.70 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு:

திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க ரூபாய். 70 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 6 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் மேலும் 3 கல்லூரிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Related Stories: