பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 625 டன் புதிய ரூபாய் நோட்டை விமானப்படை எடுத்து சென்றது: முன்னாள் தளபதி தகவல்

மும்பை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் விமானப்டை மூலமாக 625 டன் புதிய ரூபாய் நோட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டதாக முன்னாள் விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். ஐஐடி பாம்பே சார்பாக மும்பையில் நேற்று முன்தினம் தொழில்நுட்ப விழா நடந்தது. இந்த விழாவில் இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி தனோவா கலந்து கொண்டு பேசியதாவது: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நாங்கள் புதிய ரூபாய் நோட்டுக்களை உங்களுக்காக கொண்டு வந்தோம். விமான படைக்கு சொந்தமான விமானங்கள் மூலமாக புதிய ரூபாய் நோட்டுக்கள் கொண்டு செல்லப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசு கருவூலங்களில் இவை வழங்கப்பட்டது. ரூ.1 கோடி ரூபாய் கரன்சியானது 20 கிலோ பையில் வந்தது. நாங்கள் எத்தனை கோடி ரூபாயை எடுத்து சென்றோம் என்பது எனக்கு தெரியாது. ஆனால் 625 டன் அளவுள்ள ரூபாய் நோட்டுக்களை விமானப்படை விமானங்கள் எடுத்து சென்றன. 33 முறை இதுபோன்ற புதிய ரூபாய் நோட்டுக்கள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. ரபேல் விமானம் கொள்முதல் தொடர்பான சர்ச்சைகள் போன்றவை பாதுகாப்பு கொள்முதல் நடவடிக்கைளின் வேகத்தை குறைத்துவிடும். ஆயுத படையின் திறனையும் பாதிக்கும்.

ராஜிவ்காந்தி தலைமையிலான அரசு இருந்தபோது போபர்ஸ் ஒப்பந்தமும் சர்ச்சைக்குள்ளானது. எனினும் போபர்ஸ் பீரங்கிகள் சிறப்பாக இருந்தது. கடந்த ஆண்டு பாலக்கோடு தாக்குதலுக்கு பின்னர் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தாமான் மிக் 21 விமானத்துக்கு பதிலாக ரபேல் விமானத்தில் பறந்திருந்தால் அதன் முடிவானது வேறுமாதிரியாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தனோவா விமானப்படையின் தளபதியாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் முதல் 2019ம் ஆண்டு செப்டம்பர் வரை பொறுப்பில் இருந்தார்.

Related Stories: