திருமுல்லைவாயல், பெருங்களத்தூர் பகுதியில் 2 வீடுகளில் 133 சவரன் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல் மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் 2 வீடுகளில் நுழைந்து 133 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருமுல்லைவாயலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் அருண்குமார் (54). இவர், துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வைஜெயந்திமாலா பாய் (49). இவர்களது மகன் விக்னேஸ்வரன் (20) அரும்பாக்கத்தில் உள்ள  தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வைஜெயந்திமாலா பாய், தனது மகனுடன் பெங்களூருவில் வசிக்கும் அக்கா வீட்டிற்கு சென்றார். பின்னர், அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு மகனுடன் மீண்டும் வீடு திரும்பினார். வீட்டை திறந்து உள்ளே சென்றபோது, உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. படுக்கையறைக்கு சென்று பார்த்த போது, பீரோ திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. பைப்லைன் வழியாக மேலே ஏறிய மர்ம நபர்கள், குளியலறை ஜாலியை உடைத்து உள்ளே புகுந்து நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதுகுறித்து வைஜயந்திமாலா பாய், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவு உள்ளிட்டவைகளில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்று கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு சம்பவம்: பெருங்களத்தூர், என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (36). இவர், சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கார்த்திகேயன் சபரிமலைக்கு மாலை போட்டிருந்ததால் கடந்த 30ம் தேதி சபரிமலைக்கு சென்றார். அவரது மனைவி, வீட்டை பூட்டிவிட்டு தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை கார்த்திகேயன் சபரிமலையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 53 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை கொண்டு அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

* போலீசார் பற்றாக்குறை

பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் சதானந்தபுரம், முடிச்சூர், ஆர்.எம்.கே நகர், சீனிவாசா நகர் ஆகிய 4 செக்டார்கள் உள்ளன. இந்த காவல் நிலையத்தில் முன்பு ஒரு செக்டாருக்கு 3 போலீசார் இருப்பார்கள். ஆனால் தற்போது ஒரு  செக்டாருக்கு ஒருவர் மட்டுமே இருக்கின்றார். இவ்வாறு இருப்பவர்களை 2 ஷிப்ட்டுகளில் பணி செய்ய சொல்கிறார்கள். ஒரு நாள் விட்டு, ஒரு நாள் இரவில் கண் விழித்தால் அந்த போலீசார் எப்படி வேலை செய்ய முடியும். 3 ஷிப்ட் முறை இல்லாததே இப்பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்க காரணம். ஆயுதப்படை போலீஸ் 10 பேரையாவது பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லை பகுதிகளில் இரவில் பணிக்கு நியமிக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: