மருதூரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி கிராம மக்கள் மண்ணெண்ணை கேனுடன் சாலை மறியல் போராட்டம்: பெரம்பலூர் அருகே பரபரப்பு

அரியலூர்: செந்துறை அருகே மருதூர் கிராமத்தில் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்தக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் நடத்திய பேச்சு வார்தையில் உடன்பாடு ஏற்படாததால் தீக்குளிக்க முயன்ற 19 பேரை கைது செய்து கூட்டத்தை கலைத்தனர்.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் மருதூர் கிராம ஊராட்சி தலைவருக்கு 7 பேர் போட்டியிட்டனர். இதில், தெற்குபட்டி கிராமத்தை சேர்ந்த இந்திரா மூக்கு கண்ணாடி சின்னத்திலும், மருதூர் கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி கை உருளை சின்னத்திலும் போட்டியிட்டனர்.ஆண்டிமடத்தில் 2ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவில் இந்திரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்திரா ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினர்.

சிறிது நேரத்தில் எதிர் தரப்பு முகவர்கள் இன்றி எண்ணப்பட்ட தபால் வாக்குகள் எண்ணிக்கையில் மருதூரை சேர்ந்த சரஸ்வதி வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டதால், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்தில் இந்திரா தரப்பினர் தபால் வாக்குகளை எங்கள் முன்பு எண்ண வேண்டும் என முறையிட்டனர். அப்போது, தேர்தல் அலுவலர் மறுப்பு தெரிவித்து, அங்கிருந்து அனைவரும் காவல் துறையினரால் வெளியேற்றப்பட்டனர். மேலும் 2 ம்தேதி இரவு மருதூரில் மறு எண்ணிக்கை நடத்த கோரி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், 7 பேர் போட்டியிட்ட நிலையில், எனது சின்னமான மூக்கு கண்ணாடி கடைசியாக இருந்ததால், தபால் வாக்குகளில் கடைசி சின்னத்தை கிழித்து விட்டு, எதிர் தரப்பினர் வெற்றிப்பெற்றதாக அறிவித்துள்ளனர். எனவே, மீண்டும் எங்கள் முன்பு தபால் வாக்குகளை காண்பித்து எண்ணிக்கை நடத்த வேண்டும், அதுவரை மருதூர் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும் எனக்கோரி இந்திரா ஆதரவாளர்கள் தெற்குப்பட்டியில் நேற்று நூற்றுக்கணக்கானோர் மண்ணெண்ணை கேனுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த அரியலூர் டிஎஸ்பி திருமேனி மற்றும் செந்துறை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கலைந்து செல்லுங்கள் எனக்கூறியும் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் 4 பெண்கள் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் செந்துறை - ஜெயங்கொண்டம் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து மருதூர் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.

Related Stories: