அதிமுக பிரமுகர் வீடு முன் சேலைகளை வீசினர் தேர்தல் முடிவை மாற்றியதாக கூறி பிடிஓ ஆபிசில் தீக்குளிக்க முயற்சி : கிராம மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

ஆத்தூர்: சேலம் அருகே அதிமுக பிரமுகர் தலையீட்டால்  தேர்தல் முடிவை மாற்றியதாக கூறி,  பிடிஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தீக்குளிக்க முயன்றனர். சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ளது களரம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கான தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த வெண்ணிலா, அதிமுகவை சேர்ந்த மகாலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் வெண்ணிலா 463 வாக்குகளும், மகாலட்சுமி 435 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து 28 வாக்குகள் வித்தியாசத்தில் வெண்ணிலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் பல மணி நேரமாகியும் வெற்றி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுடன் சென்று வெண்ணிலா, தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது, மகாலட்சுமி 6 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். அந்த 6 ஓட்டு எப்படி கூடுதலாக வந்தது என்ற கேள்விக்கு முறையான பதில் இல்லை. இதனால் ஆவேசமடைந்து கோஷமிட்டனர். போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று  காலை வெண்ணிலா, கிராம மக்களுடன் களரம்பட்டி பிடிஓ அலுவலகத்தின் முன்பு திரண்டார். அப்போது, ‘அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளரான முருகேசன் என்பவர் தலையிட்டு, தனது உறவினரான மகாலட்சுமிக்காக வெற்றி நிலவரத்தை மாற்றி உள்ளார்’ என்று வெண்ணிலா புகார் தெரிவித்தார். அவருடன் வந்த பொதுமக்கள், வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து வந்திருந்தனர். எங்கள் வாக்குகளை திருடியதால் அடையாள அட்டையை கலெக்டர் ஆபீசில் ஒப்படைக்கிறோம் என்று அவர்கள் கோஷமிட்டனர். அவர்களில் சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் அங்கிருந்து கலைத்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தேர்தலில் வாக்களிக்க வீடு வீடாக புடவை கொடுத்ததாக கூறி, முருகேசன்  வீட்டிற்கு முன்பு வந்து சிலர் சேலைகளை வீசினர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் இருதரப்பினர் மோதிக்கொள்ளும் நிலையும் உருவானதால், போலீசார் களரம்பட்டி கிராமத்தில் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: