மத மாற்றத்தை எதிர்த்ததால் ஆத்திரம் பாக்.கில் சீக்கியர்கள் மீது முஸ்லிம்கள் கடும் தாக்குதல்

அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் சீக்கிய இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்ததை எதிர்த்த சீக்கியர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள நன்கனா சாகிப்பில், சீக்கியர்களின் முதல் மத குருவான குருநானக் தேவின் புனிததலம் (குருத்வாரா) உள்ளது. அவர் பிறந்த இந்த இடத்துக்கு இந்தியாவை சேர்ந்த சீக்கியர்கள் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இதற்காக, பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டு அரசும், இந்திய பகுதியில் மத்திய அரசும் சமீபத்தில் சாலை அமைத்து திறந்தன. அதில், ஏராளமான சீக்கியர்கள் இந்த புனிததலத்துக்கு சென்று வழிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நன்கனா சாகிப் பகுதியில் வசிக்கும் சீக்கிய இளம்பெண்ணான ஜெக்ஜித் கவுர் என்பவரை அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தனர்.

 இதற்கு அப்பகுதி சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி முஸ்லிம்கள் கூட்டமாக சேர்ந்து, சீக்கியர்கள் மீதும், குருத்வாராவின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். புனிததலத்துக்கு வந்த சீக்கியர்களும் இதில் சிக்கினர். இதனால் சீக்கியர்கள் உயிர் பிழைப்பதற்காக புனிததலத்திலும், வீடுகளிலும் பதுங்கினர். இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அங்குள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருநானக் தேவ் குருத்வாராவை பாதுகாக்கும்படியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, அப்பகுதியில் முஸ்லிம் - சீக்கியர் இடையே பதற்றம் நிலவுகிறது.

Related Stories: