உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி முன்னிலை தமிழக காங்கிரஸ் அவசர ஆலோசனை கூட்டம்: சத்தியமூர்த்தி பவனில் நாளை நடக்கிறது

சென்னை,ஜன. 3: உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பல இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி முன்னணி யில் இருப்பது  குறித்தும், மற்ற பதவிகளில் அடைந்த தோல்வி குறித்து விவாதிக்கவும் தமிழக காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நாளை நடக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இக்கூட்டம் நடக்கிறது.  அப்போது, அடுத்ததாக நடைபெற உள்ள நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கான தேர்தலிலும் வெற்றியை தொடரச் செய்வதற்கான வெற்றி வியூகம் குறித்தும் விவாதிக்க உள்ளனர். மேலும் வரும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை ஆய்வு செய்ய குழு அமைப்பது, அந்த இடங்களை கூட்டணியில் கேட்டு பெறுவது, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

 நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதேபோன்று வரும் தேர்தலிலும் மேலிட தலைவர்களை பிரச்சாரத்துக்கு அழைப்பது குறித்தும் விவாதிக்கின்றனர்.  குடியுரிமை சட்ட திருதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட வாரியாக பேரணி நடத்த கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுவரை வடசென்னை மாவட்டத்தில் மட்டும் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதபோன்று மற்ற மாவட்டங்களில் நடத்துவது குறித்து விவாதிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: