டெல்லியில் மீண்டும் பயங்கர தீ விபத்து குடோன் வெடித்து தீயணைப்பு வீரர் பலி: 14 பேர் படுகாயம்: பொது மக்கள் பீதி

புதுடெல்லி: வடமேற்கு டெல்லி உத்யோக் நகரில் பேட்டரி குடோன் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு வீரர் சிகிச்சை பலனின்றி இறந்தார். டெல்ல்யில் தொடரும் தீ விபத்துகளால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். வடமேற்கு டெல்லி பீராகரி அருகே உத்யோக் நகரில் பேட்டரி குடோன் உள்ளது. இரண்டு மாடியாக உள்ள அந்த குடோனில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 35 தீயணைப்புவண்டிகள் விரைந்தன. கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க வீரர்களில் ஒரு பிரிவும், குடோனுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்க மற்றொரு பிரிவுமாக வீரர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

இதற்கிடையே குடோன் பின்பகுதியில் காலை 9.00 மணி அளவில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து மொத்த குடோனும் சரிந்து தரைமட்டமானது. பேட்டரி ரசாயனங்களுடன் இணைந்து தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கும்படியும் அறிவுறுத்தினர். பின்னர் இடிபாடுகளில் சிக்கிய செக்யூரிட்டி ஒருவர், 2 தொழிலாளர்கள் மற்றும் 13 தீயணைப்பு வீரர்கள் உள்பட 18 வீரர்களை மீட்டனர்.

அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தீயணைப்பு வீரர் அமித் பல்யாணை(27)  என்பவரை ஸ்ரீ பாலாஜி ஆக்சன் மெடிக்கல் இன்ஸ்ட்டிடியூட் மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு உயிரிழந்தார்.  14 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பல்யாண் குடும்பத்தினருக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். டெல்லியில் அடுத்தடுத்து நடைபெறும் தீ விபத்துகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

* குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

தீ விபத்து தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்துள்ள போலீசாரிடம் இருந்து கோப்புகளை குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி உத்தரவிட்ட காவல்துறை கமிஷனர் அமுல்ய பட்நாயக், விசாரணையை விரைந்து முடிக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தி   உள்ளார்.

Related Stories: