ஜம்மு - காஷ்மீரில் தீவிர கெடுபிடிக்கு மத்தியில் 2019ல் 160 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் இந்தாண்டு தீவிர கெடுபிடிகளுக்கு மத்தியில் 160 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் டைரக்டர் ஜெனரல் தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரத்து செய்யப்பட்டபின், அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக உள்ளன. பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீட்டு சிறையிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் 144 தடை உத்தரவுஅமலில் உள்ளது. இணைய தள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல்  காஷ்மீர் பள்ளத்தாக்கில் அனைத்து அரசு  தொலைபேசிகளிலும் இணைய சேவைகள் மற்றும் அனைத்து மொபைல் போன்களுக்கும்  எஸ்எம்எஸ் சேவையும் வழங்கப்பட்டு வருவதாக, ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ செய்தித்  தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்தார். மாணவர்கள்,  உதவித்தொகை விண்ணப்பதாரர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிறருக்கு வசதியாக  டிச. 10ம் தேதி முதல் செல்போன்களில் சில குறுந்தகவல் சேவை (எஸ்எம்எஸ்)  இயக்கப்பட்டது. 370வது பிரிவின் விதிகளை ரத்து  செய்ததை அடுத்து, 145 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட இணைய சேவைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் செல்போன் இணைய சேவைகள் கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டன.

இந்நிலையில், போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டிஜிபி) தில்பாக் சிங் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு (2019) ஜம்மு-காஷ்மீரில் 160 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 102 பேர் உட்பட 250 தீவிரவாதிகள் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. தீவிரவாத சம்பவங்களில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபடுவது குறைந்துள்ளது. 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தீவிரவாத சம்பவங்களில் 30 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்கள் கொலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் 36 சதவீதம் குறைந்துள்ளது. 218 உள்ளூர் இளைஞர்கள் 2018ல் தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்தனர். ஆனால் 2019ல் 139 பேர் மட்டுமே இணைந்தனர். புதிய ஆட்களில் 89 பேர் மட்டுமே மீதமுள்ளனர்.

கடந்தாண்டுடன் (2018ல் 625 சம்பவம்) ஒப்பிடும்போது இந்த ஆண்டு 481 சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. 80 சதவீதம் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டில் 102 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். 10 தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 11 வீரம்மிக்க காவல்துறையினர் தவிர பாதுகாப்புப் படையினரைச் சேர்ந்த 72 பேர் வீர மரணம் எய்துள்ளனர். மக்கள் முழுமையாக ஒத்துழைத்ததால் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. இந்த ஆண்டு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை பூஜ்ஜியமாக இருந்தது. கடந்த ஆண்டு 143 உடன் ஒப்பிடும்போது 2019ம் ஆண்டில் 130 ஊடுருவல்கள் இருந்தன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: