ஏ டிவிஷன் லீக் ஹாக்கி எஸ்டிஏடி சாம்பியன்

சென்னை: ஏ டிவிஷன் லீக் ஹாக்கி தொடரில் எஸ்டிஏடி அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னையில் கடந்த 2 மாதங்களாக ஏ டிவிஷன் ஹாக்கி போட்டித் தொடர் நடந்து வந்தது. இதில்  அரசு நிறுவனங்கள், தனியார் கிளப்களை சேர்ந்த மொத்தம் 42 அணிகள் 6 பிரிவுகளாக களம் கண்டன. இதன் கால் இறுதிப் போட்டிகளில்  அஞ்சல் துறை அணி ஆயுதப்படையையும், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அணி யுனிவர்சல் ஹாக்கி கிளப்பையும், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அணி  மெட்ராஸ் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப்பையும் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) அணி ஆர்வி அகடமியையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறின.முதல் அரை இறுதியில் எஸ்டிஏடி அணி 9-0 என்ற கோல் கணக்கில் ஆர்பிஐ அணியையும், 2வது அரை இறுதியில் எஸ்பிஐ அணி 1-0 என்ற கோல் கணக்கில்  அஞ்சல் துறையையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

இந்நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப்போட்டி எழும்பூர் ஹாக்கி அரங்கில் நேற்று மாலை நடந்தது.  அதில் எஸ்டிஏடி அணி  3-0  என்ற கோல் கணக்கில் எஸ்பிஐ அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.எஸ்டிஏடி அணியின்  கார்த்தி 2, விக்னேஷ் ஒரு கோல் போட்டனர். தொடரின் சிறந்த கோல்கீப்பராக நித்யசிவா (ஆர்வி அகடமி), சிறந்த தற்காப்பு ஆட்டக்காரராக ஆனந்த் (செயின்ட் பால்ஸ்), சிறந்த நடுகள ஆட்டக்காரராக சஞ்ஜெய் (திருமால் அகடமி), சிறந்த முன்கள ஆட்டக்காரராக  வினோத் (எஸ்டிஏடி), சிறந்த இளம் வீரராக கார்த்திக் (எஸ்டிஏடி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories: