கோவை பங்களாவில் சிக்கிய பழைய ரூபாய் நோட்டுகள்: மோசடி கும்பல் குறித்து விசாரணை

கோவை: கோவை வடவள்ளி ஜெயலட்சுமி நகரில் சொகுசு பங்களாவில் பழைய ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து நேற்று முன்தினம் வடவள்ளி போலீசார், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 268 கட்டுக்களில் பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டு இருப்பது தெரியவந்தது. ஆனால், கட்டுக்களின் மேல், கீழ் பகுதியில் ஒரிஜினல் ரூபாய் நோட்டுக்களும், இடையே வெள்ளை பேப்பர்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்றும் பங்களாவில் சோதனை நடத்தினர். இந்த பங்களாவில் உக்கடத்தை சேர்ந்த ரசீத் (35), தொழில் நிறுவனம் நடத்தி வருவதாக கூறி இந்த பங்களாவை மாதம் 2.5 லட்ச ரூபாய்க்கு எடுத்துள்ளார். இந்த பங்களாவில் ரசீத் குடும்பத்தினர் யாரும் வசிக்கவில்லை. ஆனால் சிலர் ரகசியமாக வந்து செல்வதாகவும், தொழில் கூட்டாளிகளாக பெரோஸ் (34), சேக் (32) ஆகியோர் இருந்துள்ளனர் என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். சோதனைக்கு வரும் தகவல் அறிந்து அவர்கள் எஸ்கேப் ஆகி இருக்கலாம் என்றும் கூறினர்.

போலீசாரின் மேலும் விசாரணையில், ஹவாலா பணம் வைத்திருப்பவர்களிடம் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கி வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பங்களாவில் பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ரூ.1.25 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டு வாங்கி உள்ளனர். இதற்கு காரணமாக, ‘மத்திய அரசு செல்லாது என அறிவித்த பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். மேலும், ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் செல்லாததாக அறிவிக்க உள்ளது’ என்றும் கூறி உள்ளனர். இந்த யுக்தியின் மூலம் சுமார் ரூ.100 கோடி ரூபாய் மோசடி செய்ய திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, தலைமறைவான இவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Related Stories: