மனிதர்கள் வாழ முடியுமா என செவ்வாயில் ஆய்வு நடத்த தயாராகும் மார்ஸ் 2020 ரோவர்: நாசா ஆய்வகத்தில் அறிமுகம்

பசடேனா: செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ள மார்ஸ் - 2020 ரோவரை, நாசா தனது ஆய்வகத்தில் அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசா’, செவ்வாய் கிரகத்துக்கு, ‘மார்ஸ் 2020 ரோவர்’ விண்கலத்தை, அடுத்த ஆண்டு ஜூலையில் செலுத்த திட்டமிட்டுள்ளது. 2021 பிப்ரவரியில், இது, செவ்வாயில் தரையிறங்கும்.  செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சோதனைகளை மேற்கொள்ள இந்த ரோவர் அனுப்பப்படுகிறது. மேலும் அங்கு ஏற்கனவே உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் உள்ளதா என்றும்  சோதனை செய்யும்.

தற்போது, லாஸ் ஏஞ்சல்சின் அருகே பசடேனாவில் உள்ள ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தில் ரோவர் உருவாக்கப்படும் பணி நடந்து வருகிறது. இதில், ஏராளமான விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். மார்ஸ் 2020 ரோவரை  அறிமுகப்படுத்தும் விதமாக ஆய்வகத்தில் அதனை பார்வையிட பத்திரிகையாளர்களுக்கு நாசா அழைப்பு விடுத்தது. இந்நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

6 சக்கரங்கள் கொண்ட ரோவரில், துல்லியமாக படம் பிடிக்க 23 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செவ்வாயின் காற்றின் வேகத்தை உணர 2 கருவிகளும், ரசாயன ஆய்விற்கு பயன்படுத்தப்படும் லேசர்களும் உள்ளன. ஒருநாளைக்கு 180 மீட்டர்  தூரத்திற்கு ரோவர் பயணிக்கும். இது, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் ஐந்தாவது அமெரிக்க ரோவர் ஆகும். இதுவரை செவ்வாயில் ஆய்வு செய்ய ரஷ்யா, அமெரிக்கா மட்டுமே ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கி உள்ளன. சமீபத்தில்  இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் தரையிறக்கம் வெற்றிகரமாக அமையவில்லை.

Related Stories: