ஒகேனக்கல் ஐந்தருவி பகுதியில் 12 ஆண்டுக்கு பின் பரிசல் சவாரி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

பென்னாகரம்: தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், 12 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக நேற்று ஐந்தருவி பகுதியில் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து விடுமுறை மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், ஒகேனக்கல்லுக்கு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

அவர்கள் பரிசலில் உற்சாகமாக சவாரி செய்து காவிரியின் இயற்கை அழகை கண்டு களித்தனர். ஒகேனக்கல் ஐந்தருவி பகுதியில் பரிசல் சவாரி என்பது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது. அதன்பின் கடும் வெள்ளம் அல்லது நீர் வற்றி வெறும் பாறைகளாக இருந்ததால் நடக்கவே இல்லை. இந்நிலையில், ஐந்தருவி பகுதியில் 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று பரிசல் ஓட்டிகள் சுற்றுலா பயணிகளை பரிசலில் அழைத்து சென்று, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை காண்பித்தனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக உள்ளது. பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் திரண்டதால், ஒகேனக்கல் நேற்று திருவிழா கோலம் பூண்டது.

Related Stories: