தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை : சுழற்சி முறையில் பணியாற்றி சமாளிக்கும் அவலம்

வேலூர்: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறையை சமாளிக்க சுழற்சி முறையில் மாற்றுப்பணி அடிப்படையில் வேறு ஊர்களில் இருந்து டாக்டர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கும் அவலநிலை நீடிக்கிறது. உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் 20 லட்சம் நர்சுகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், இதர நிலை மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களிலும் பற்றாக்குறை என்பது நீடித்து வருவதாகவும் கூறியிருக்கிறது. அதாவது ஆயிரம் பேருக்கு ஒரு அரசு டாக்டரும், 483 பேருக்கு ஒரு நர்சும் என்ற விகிதாசாரம் இருக்க வேண்டிய நிலையில் இந்தியாவில் 10,189 பேருக்கு ஒரு அரசு டாக்டரே உள்ளார். இதனால் மருத்துவ செலவினம் 65 சதவீதம் அதிகரித்து ஆண்டுக்கு 5.70 கோடி பேர் வறுமைக்குள் தள்ளப்படுவதாகவும் அது தனது வேதனை குரலை பதிவு செய்துள்ளது. மேலும் 5.7 மில்லியன் பேர் மருத்துவ சிகிச்சை உரிய முறையில் கிடைக்காமல் மரணம் அடைவதாகவும் அது தெரிவித்துள்ளது. அதற்கேற்ப தமிழகத்தில் படிப்படியாக அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக கூறினாலும், டாக்டர்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் நிலையும், அவசர காலங்களில் உரிய சிகிச்சை கிடைக்காத அவலமும் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் 24 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும், 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகளும், 273 தாலுகா அந்தஸ்திலான மருத்துவமனைகளும், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 8,713 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. அதன்படி 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையமும் அமைந்துள்ளன. இதில் வேலூர் வருவாய் மாவட்டத்தில் 80 ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் 453ம், வேலூர் சுகாதார மாவட்டத்தில் 41 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 231 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. நகர்ப்புற சுகாதார நிலையங்கள் வேலூரில் 10ம், திருப்பத்தூரில் 5ம் உள்ளன. இதுதவிர வாலாஜாவில் உள்ள அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையும், 13 தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளும் அமைந்துள்ளன. இதில் கலவை, சோளிங்கர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தாலுகா அந்தஸ்திலான மருத்துவமனைகளும் அடங்கும்.அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை பொறுத்தவரை போதுமான டாக்டர்கள் இருந்தாலும், நர்சுகள், பார்மசிஸ்ட்டுகள் உட்பட மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. அதேநேரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஒரு மருத்துவ அலுவலருடன் பொது மருத்துவம், குழந்தைகள் நலம், மகப்பேறு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு உட்பட அனைத்து பிரிவிலும் 30 டாக்டர்கள் இருக்க வேண்டும்.

அதேபோல் 100 படுக்கைகள் கொண்ட தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் மருத்துவ அலுவலர் தலைமையின் கீழ் 11 டாக்டர்கள் இருக்க வேண்டும். இந்த விகிதாச்சாரத்தில்தான் பற்றாக்குறை மாநிலம் முழுவதும் இருப்பதாக மருத்துவர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து டாக்டர்களை சுழற்சி முறையில் வைத்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் இரவு நேரங்களில் பல தாலுகா அளவிலான மருத்துவமனைகள் மட்டுமின்றி, மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை வழங்குவதற்கு டாக்டர்கள் இல்லாத நிலை உள்ளது. அதேபோல் 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவில் முக்கிய பிரிவுகளில் டாக்டர்களே இல்லாத நிலை உள்ளது.

டாக்டர்கள் பற்றாக்குறையை நிவர்த்திக்க டாக்டர்கள் நியமனம் நடந்து வருவதாகவும், விரைவில் 1,100 டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டாலும், பணி நியமனம் என்பது மிக மெதுவாகவே நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்

இதுகுறித்து அரசு மருத்துவர் சங்க நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, ‘மாநிலம் முழுவதும் இன்னும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்களை நியமிக்க வேண்டும். அதேபோல் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் மிகவும் அவசியம். அதுவும் பார்மசிஸ்ட்டுகள் நியமனம் என்பது கண்டிப்பான ஒன்று. மாநில அரசு இவ்விஷயத்தில் மெதுவாகவே பணியாற்றி வருகிறது. அதேநேரத்தில் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளபடி ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையை எட்ட கூடுதலாக மருத்துவக்கல்லூரிகளை தொடங்க வேண்டும். அதேநேரத்தில் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ மேல்’ என்றும் தெரிவித்தனர்.

Related Stories: