தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கிடைத்துள்ளது..இதற்காக பாடுபட்ட அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள், ஊடகங்களுக்கு நன்றி: முதல்வர் பழனிசாமி

சென்னை: அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியதால் தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கிடைத்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே சிறந்த ஆளுமை திறன் மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்வது குறித்து பெருமிதம் தெரிவித்தார். இதன் காராணமாகவே நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் என மத்திய அரசு அறிவித்து இருப்பது குறித்து சுட்டிக்காட்டினார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இதற்காக பாடுபட்ட அனைத்து அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும், ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. இதற்காக யாரும் சிபாரிசு செய்யவில்லை.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்குப்பதிவு மறைமுகமாகவே நடைபெற்றுள்ளது. யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானித்துள்ளனர். ஊரக மற்றும் நகரங்களில் தனித்தனியாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தவறு இல்லை. உள்ளாட்சி தேர்தல் சுதந்திரமாக நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி அத்துமீறல் எதுவும் இல்லை. ஜனவரி 26ம் தேதி பிரதமர் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பார்க்க தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள், விருப்பட்டால் பள்ளிக்கு வரலாம். கட்டாயம் இல்லை. செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று திரண்டு மத்திய மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருகின்றன. மத்திய அரசு உரிய விளக்கம் அளித்தும் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மக்களை குழப்பி சூழ்ச்சி செய்கின்றனர்.

இந்தியாவில் வசிக்கும் எந்த இந்தியர்களும் இதனால் பாதிப்படைய மாட்டார்கள். பொதுமக்களும், இளைஞர்களும், சிறுபான்மையினரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே கொண்டு வந்தது. அதைதான் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய குடியுரிமை மக்கள் பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றது, என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் அடுத்த ஆண்டு புதிதாக 900 பேர் புதிதாக மருத்துவப் படிப்பில் சேரும் வகையில் 9 மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும். மின் ஊழியர்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடி உள்ளதை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories: