என்.பி.ஆர்.-ஆக இருந்தாலும், என்.ஆர்.சி.யாக இருந்தாலும் அவை ஏழை மக்கள் மீது திணிக்கப்படும் வரிச்சுமையே: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராய்ப்பூர்: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏழை மக்களின் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மூன்று நாட்கள் நடைபெறும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனத்திருவிழாவை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டுமே ஏழை மக்கள் மீது திணிக்கப்படும் வரிச்சுமை என்று கூறினார். மேலும் பேசிய அவர், ஏற்கனவே பணமதிப்பிழப்பு என்ற சுமை மக்கள் மீது திணிக்கப்பட்டது. அப்போது, தங்கள் வங்கி கணக்கில் பணம் இருந்தும் அதனை எடுக்க முடியாமல் மக்கள் சிரமம் அடைந்தனர்.

அதே வேளையில் 15 பெரும் பணக்காரர்களுக்கு கோடி கோடியாக பணம் வழங்கப்பட்டது. தற்போதும் அதே சூழலே நிலவுகிறது. ஏழை மக்களின் ஒவ்வொரு ரூபாயும் குறிப்பிட்ட 15 பணக்காரர்களுக்கே வழங்கப்படுகிறது, என்று குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக மலைவாழ் மக்களின் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ராகுல் காந்தி, அங்கிருந்த கலைஞர்களுடன் இணைந்து இசை வாத்தியங்களை இயக்கி உற்சாகத்துடன் நடமாடினார். சத்தீஸ்கரில் நடைபெறும் இந்த பாரம்பரிய நடன விழாவில் இந்தியா, இலங்கை, உகாண்டா உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்த, பழங்குடியின கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். தொடக்க விழாவில் ராகுல் காந்தி ஆடிய பாரம்பரிய நடனம் சமூகவலைத்தங்களில் வைரலாகியுள்ளது.

Related Stories: