வீரர்கள் அறையிலிருந்த பிசிசிஐ தேர்வாளர் வெளியேற்றம்

கொல்கத்தா: ரஞ்சி போட்டியின் போது வீரர்கள் எதிர்ப்பு காரணமாக, அவர்களது அறையில் இருந்த பிசிசிஐ தேர்வாளர் தேவாங் காந்தி வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்கால்-ஆந்திரா அணிகளுக்கு இடையிலான  ரஞ்சி கோப்பை லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கிறது. போட்டியின் 2வது நாளான நேற்று  பெங்கால் வீரர்களின் உடை மாற்றும் அறைக்கு பிசிசிஐ தேர்வாளர் தேவாங் காந்தி சென்றுள்ளார். அவர் அறைக்குள் இருப்பது பிசிசிஐ  ஊழல் தடுப்பு விதிகளுக்கு எதிரானது என்று வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த விதியின்படி வீரர்களின் அறைக்கு வீரர்கள், அணியின் ஊழியர்கள் மட்டுமே செல்ல முடியும். எனவே இது குறித்து வீரர்களின் சார்பில் அணியின் மூத்த  வீரர் மனோஜ் திவாரி உடனடியாக  பெங்கால்-ஆந்திரா போட்டிக்கான பிசிசிஐ-ன் ஊழல்  தடுப்பு அலுவலர் சவுமென் கர்மக்கரிடம் புகார் செய்தார்.

அவர் உடனடியாக   வீரர்களின் அறைக்கு சென்று அங்கிருந்த தேவாங் காந்தியை வெளியேற்றினார். அந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மனோஜ் திவாரி, ‘ஊழல் தடுப்பு விதிமுறைகளை நாங்கள் பின்பற்ற  வேண்டும். தேசிய தேர்வாளர் உரிய அனுமதியின்றி வீரர்களின் அறைக்குள் வரக்கூடாது’ என்றார். கிழக்கு மண்டலம் சார்பில் பிசிசிஐ தேர்வாளர் குழுவில் இருப்பவர் தேவாங் காந்தி. அவரது தரப்பில், ‘ தேவாங் காந்தி மருத்துவ அறையில்  இருந்தபடிதான் பிசியோதெரபிஸ்ட்டை அழைத்துள்ளார். வீரர்களின் அறைக்குள் செல்லவில்லை’ என்று கூறியுள்ளது.

Related Stories: