மக்களை தவறாக வழிநடத்துபவர்கள் சரியான தலைவர்கள் அல்ல: குடியுரிமை சட்ட விவகாரத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்து

புதுடெல்லி: மக்களை தவறாக வழிநடத்துபவர்கள் சரியான தலைவர்கள் அல்ல என்று குடியுரிமை சட்ட விவகாரத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்து 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க, குடியுரிமை  திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டங்களில் ரயில் நிலையங்கள், ரயில்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் ஏராளமானவை தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. போலீசாரின் துப்பாக்கிச்சூடு பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், குடியுரிமை சட்ட விவகாரத்தில் நாட்டு மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மக்களை தவறான பாதையில் வழிநடத்துபவர்கள் சரியான தலைவர்கள் அல்ல. ஏனெனில், போராட்ட களத்தில் ஏராளமான மாணவர்களை நம்மால் காண முடிகிறது.

இவர்கள், பொது சொத்துகளுக்கு தீ வைப்பது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற தவறான பாதையில் வழிநடத்தப்படுகிறார்கள். பொது சொத்துக்களை சேதப்படுத்தவும், வன்முறையில் ஈடுபடவும் பெரிய மக்கள் கூட்டத்தை தூண்டுவது தலைமைக்கு பொருந்தாது, என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், டெல்லியின் குளிரிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் உடைகளை அணிந்துள்ளோம். அதே வேளையில், சியாச்சினில் நிலவும் மைனஸ் 10 மதல் மைனஸ் 45 டிகிரி குளிரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் எனது படை வீரர்களுக்கு இத்தருணத்தில் எனது மரியாதையை செலுத்த விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.

Related Stories: