உலகில் அமைதி நிலவ வேண்டும் வாடிகனில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் போப் பிரான்சிஸ் உரை: பெத்லஹேமிலும் சிறப்பு வழிபாடு

வாடிகன்: கிறிஸ்துமசையொட்டி வாடிகனில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற பின் போப் பிரான்சிஸ் விடுத்துள்ள செய்தியில் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இயேசு பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதி உலகெங்கும் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம்  நள்ளிரவு பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகனில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் போப்பாண்டவர் பிரான்சிஸ் பங்கேற்றார். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அவரது பேச்சை கேட்க திரண்டிருந்தனர்.

வாடிகனில் நடந்த நள்ளிரவு பிரார்த்தனை கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பேசியதாவது: உங்கள் அனைவருக்கு எனது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். பல்வேறு தவறான கருத்துக்களையும் தீங்கிழைக்கும் கருத்துக்களையும் நீங்கள்  கொண்டிருந்தாலும். இயேசு பிரான் உங்கள் மீது அன்பு செலுத்துகிறார். எளிமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் உரையாற்றினார். இதேபோல் இயேசுவின் பிறந்த இடமாக கருதப்படும் பெத்லஹேமிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது ஆர்ச் பிஷப் பிசபெல்லா பாடல் பாட பிரார்த்தனை தொடங்கியது. நள்ளிரவு சரியாக 12 மணிக்கு பெத்லஹேம் நகரம்  முழுவதும் மணியோசை ஒலித்தது. இதில் பாலஸ்தீனர்கள் மற்றும் ஏராளமான நாடுகளில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் இயேசு பிறந்த  இடத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் பாலஸ்தீன அதிபர் முகமது  அப்பாஸ் பங்கேற்றார்.

தொடர்ந்து நேற்று பிற்பகலில் நடைபெற்ற பாரம்பரிய செயின்ட் பீட்டர் சதுக்கத்தின் முன்பு திரண்டிருந்தகளிடம் போப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான வெனிசுலா, லெபனானில் நிலவும் உள்நாட்டு கிளர்ச்சிகள் மற்றும் போரில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இயேசு கிறிஸ்து பிறப்பு வெளிச்சத்தை கொண்டு வரும். இதேபோல் கடந்த பத்தாண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வரும் போரும் முடிவுக்கு வந்து உலகில் அமைதி நிலவ பிரார்த்திக்கிறேன். இதுபோல் ஈரான் மற்றும் ஏமன் நாடுளிலும் அமைதிக்காக பொதுமக்கள் ஏங்கி தவிக்கின்றனர். அங்கும் பாதுகாப்பு மற்றும் செழிப்பு நிலவட்டும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். காங்கோவில் இயேசு அமைதியை கொண்டு வரட்டும். இவ்வாறு போப் உரையாற்றினார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக  கொண்டாடப்பட்டது.

* முதல்முறையாக பிரார்த்தனை ரத்து

பிரான்சின் தலைநகர் பாரீசில் உள்ள நோட்டர் டேம் தேவாலயம் மிக பழமையானது. இங்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தேவலாயம் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து நேற்று இங்கு கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெறவில்லை. 200 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெறாததால் கிறிஸ்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். யுனேஸ்கோவின் பாரம்பரிய சுற்றுலா தலமாகவும் இது விளங்குவது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துமசையொட்டி பல கிறிஸ்தவர்கள் இந்த தேவாலயத்துக்கு பிரார்த்தனை செய்வதற்காக நேற்று வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

* இந்தியாவிலும் கோலாகலம்

இந்தியாவிலும் நேற்று கோலாகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத் என்று பல்வேறு நகரங்களில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. டெல்லியில் நள்ளிரவில் நடந்த பிரார்த்தனையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அசாம் மாநிலத்தில் மட்டும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே, கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்று பல்வேறு தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தனர்.

Related Stories: