திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் ஜனாதிபதி தரிசனம்

புதுச்சேரி: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம் செய்தார்.   குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தார்.  கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த அவர் நேற்று காலை 9 மணிக்கு புறப்பட்டு லாஸ்பேட்டை விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் சென்றார். அவருடன் துணைவியார், மகள், கவர்னர் கிரண்பேடி ஆகியோரும் சென்றனர்.  காலை 10.15 மணியளவில் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். விஐபிக்கள் செல்லும் பாதையில் ஜனாதிபதிக்கு மயிலாடுதுறை ஆதினம், கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயில் உள்ளே சண்டிகேஸ்வரர், அம்பாள், தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனிபகவான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடத்தி ஜனாதிபதி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, குடும்பநலம், உலக நன்மை வேண்டி, ஜனாதிபதி சார்பில், அவரது பிரதிநிதிகள், நவகிரக சாந்தி ஹோமம் நடத்தினர். இதையடுத்து, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், நம் நீர் திட்டத்தின்கீழ் 266 குளங்கள் தூர்வாரப்பட்ட நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்தார். பின்னர், திட்ட தொடர்பான விளக்க கையேட்டை முதல்வர் நாராயணசாமி வெளியிட, அதனை ராம்நாத் கோவிந்த் பெற்றுக் கொண்டார்.

Related Stories: