லக்னோவில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு 25 அடியில் வெண்கலச் சிலை: நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். மறைந்த முன்னாள்  பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  16-ம் தேதி காலமானார். இவரின் நினைவைப் போற்றும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ராய்ப்பூரின் பெயரை அடல் நகர்’ எனப் பெயர் மாற்றம் செய்து  அம்மாநில அரசு அறிவித்தது. மத்தியப் பிரதேச அரசு, வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்போவதாகவும் தங்கள் மாநிலத்தில்  அவருக்கு நினைவிடம் அமைக்கப்போவதாகவும் அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு வாஜ்பாய்க்கு தன்னுடைய மாநிலத்திலும் சிலை நிறுவப்படும் என  அறிவித்திருந்தார். ஜெய்ப்பூரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலைக்கு சுமார் 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லோக் பவனில்  நிறுவப்பட்டுள்ள 25 அடி வெண்கலச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாயின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை திறந்து வைக்க இருக்கிறார்.

தொடர்ந்து, வாஜ்பாயின் பெயரில் அமையவுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி உரையாற்றவுள்ளார். இவ்விழாவில்  அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். உத்தரப்பிரதேச  மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் நிலையில் விழாவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: