காவேரிப்பாக்கத்தில் மாகாளியம்மன் கோயிலில் 3 சவரன் நகை, கிரீடம் திருட்டு

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் மாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்குள்ள அம்மனை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாகும். மேலும் இக்கோயிலில் அமாவாசை நாட்களில் ஊஞ்சல் உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் தை பொங்கல், காணும் பொங்கல், உள்ளிட்ட நாட்களில் இக்கோயிலில் சிறப்பு விழாக்கள் நடைபெறுகிறது. நேற்று காலை கோயில் பூசாரி வழக்கம் போல் பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.

மீண்டும் மாலை 5 மணியளவில் கோயிலுக்கு வந்தபோது கோயிலின் முன் பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த மாங்கல்யம், லட்சுமி பொட்டு உள்ளிட்ட 3 சவரன் தங்க நகைகள் மற்றும் அம்மன் கிரீடம், ஆலயமணி, காமாட்சி விளக்கு, ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.

Related Stories: