இந்திய குடிமக்கள் என்று நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்பு முகாம்கள்: பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டடப் பணிகள் தீவிரம்!

அசாம்: இந்திய குடிமக்கள் என்று நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில், சத்தமே இல்லாமல் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அசாம் மாநிலத்தின் கோல்பாரா என்ற இடத்தில், அடர்ந்த காடுகளின் ஒரு பகுதி அழிக்கப்பட்டு அங்கு தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. அசாமில் இந்திய குடிமக்கள் என்று நிரூபிக்க இயலாத அனைவரும் இந்த தடுப்பு முகாம்களில் தான் அடைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏறக்குறைய ஒரு சிறைச்சாலை போல தடுப்பு முகாம் கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய கட்டப் பொறியாளர் ராபின் தாஸ், இந்த வளாகத்தில் நான்கு மாடிகளைக் கொண்ட 15 கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அதில் 13 கட்டடங்கள் ஆண்களுக்கானவை. 2 கட்டடங்கள் பெண்களுக்கானவை. இவர்களுக்கென்று தனித்தனி கழிவறைகளும், குளியல் அறைகளும் கட்டப்படுகின்றன.

அதுமட்டுமல்லாது, இதே வளாகத்தில் மருத்துவமனை, பெரிய சமையல் அறைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடமும் அமைக்கப்பட்டு வருகிறது, என்று தெரிவித்துள்ளார். அசாமில் தடுப்பு முகாம் கட்டப்பட்டு வரும் நிலையில், பாரதிய ஜனதா ஆளும் கர்நாடகத்தில் பட்டியலின மாணவர்களுக்கான தங்கும் விடுதி ஒன்று தடுப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது. நீலமங்கலா அருகே சொன்டேகோபா என்ற இடத்தில் முகாம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில், சிறைச்சாலைகளில் இருப்பது போன்று 10 அடி உயர மதில்சுவர்கள், முள்வேலி, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமில் அடைக்கப்படுவோர் பயன்படுத்துவற்காக பொருட்களும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத குடியேறிகளுக்கான தடுப்பு முகாம் இந்தியாவில் எந்த இடத்திலும் அமைக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு நேர் எதிராக பல்வேறு மாநிலங்களில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: