டெல்லி குடியிருப்புவாசிகளுக்கு இன்று பட்டா வழங்குகிறார் பிரதமர் மோடி: ராம்லீலா மைதானத்தில் மூன்று அடுக்கு சிறப்பு பாதுகாப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்திற்கு தரை முதல் வான் வரை மூன்று அடுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில், 175 சதுர கி.மீ.,க்கும் அதிகமான பல்வேறு பகுதிகளில், அங்கீகாரம் இல்லா குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில், மிக குறைந்த வருவாய் உள்ள, ஆயிரக் கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இதில் 1,797 குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நில உரிமை ஆவணம் (பட்டா ) வழங்க கோரி, அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்க மத்திய அரசு முடிவு செய்து லோக்சபாவில் சட்டமும் இயற்றப்பட்டது. இதையடுத்து 40 லட்சம் குடியிருப்புவாசிகளுக்கு பட்டம் வழங்கும் விழா இன்று

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நில உரிமை ஆவணங்களை (பட்டாவை) வழங்குகிறார். இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். தினந்தோறும்  வெவ்வேறு  வடிவத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, டெல்லி ராம்லீலா மைதானத்தை ஒட்டிய வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் போலீசார்  ராம்லீலா மைதானத்தை சுற்றி வளைத்து காவல் பணி மேற்கொண்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், விமானத்தையும் ஆளில்லாத குட்டி விமானங்களையும் வீழ்த்தும் படைகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றும் நிகழ்ச்சிக்கு வரும் ஒவ்வொருவரும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளனர்.

Related Stories: