குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலை கழகத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்

புதுடெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலை கழகத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்து 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க, குடியுரிமை  திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். இதற்கிடையில் போரட்டத்தின்போது, பேருந்துகள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார், மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகிகளின் அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைந்த போலீசார், நூலகம், விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி ஆகியவற்றில் இருந்த மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் டெல்லியில் நேற்று பல இடங்களில் போராட்டம் நடந்தது. மக்கள் தேசியக் கொடியுடனும், ‘அரசியல் சாசனத்தை காப்பாற்றுங்கள்’ என்ற பேனருடனும் பேரணி சென்றனர்.

வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூர், சுந்தர் நக்ரி ஆகிய பகுதிகளில்  போலீசாரும்,  துணை ராணுவ படையினரும் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இங்கு 12 போலீஸ் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெல்கம் ஏரியா பகுதியில் உள்ள  மசூதியில் நேற்று தொழுகையை முடித்த முஸ்லிம்கள் தடையை மீறி ஜப்ராபாத் பகுதியிலிருந்து ஷீலாம்பூர் நோக்கி கோஷங்கள் எழுப்பியபடி பேரணி சென்றனர். இந்த போராட்டங்களை டிரோன்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர். டெல்லி  தர்யாகன்ச் பகுதியில் நேற்று மாலை சாலையின் நின்றிருந்த கார் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலை கழகத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related Stories: