1 லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி துவக்கம் ஆஞ்சநேயர் கோயிலில் 25ம்தேதி ஜெயந்தி விழா

நாமக்கல் : ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வரும் 25ம்தேதி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வடை தயாரிக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுத்தோறும் மார்கழி மாத அமாவாசை அன்று, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி வரும் 25ம்தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

 ஜெயந்தி விழா அன்று அதிகாலை  5மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1லட்சத்து 8 வடமாலை சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.இதையொட்டி ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி, ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று துவங்கியது. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த  ரமேஷ் பட்டாச்சாரியார்  தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர், இந்த வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்க 90 மூட்டை உளுந்தம் பருப்பு, 200 கிலோ நல்லெண்ணெய், 36 கிலோ சீரகம் மற்றும் மிளகு, 135 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

ஜெயந்தி விழா அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாமக்கல் வருவார்கள். விழாவையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று ஆர்டிஓ குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டு, அன்றைய தினம்  மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர்.

Related Stories: