தேர்தல் பார்வையாளரை கண்டித்து சேலம் எம்பி, திமுகவினர் போராட்டம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் தேர்தல் புகார்கள் குறித்து கேட்க மறுக்கும் கலெக்டர், பார்வையாளரை கண்டித்து, திமுக எம்பி, மாவட்ட செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தி.மு.க. சார்பில் பழனியம்மாள் மனு தாக்கல் செய்தார். முதலில் மனுவை ஏற்றுக்கொண்ட நிலையில், பின்னர் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து திமுவினர் போராட்டம் நடத்தியதையடுத்து, மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து புகார் அளிக்க, சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன், நெசவாளர் அணி ஆறுமுகம் உள்ளிட்ட திமுகவினர், மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜை சந்திக்க, நேற்று காலை அஸ்தம்பட்டி பயணியர் மாளிகைக்கு வந்தனர். அதற்குள், தேர்தல் பார்வையாளர் ஆய்வுக்காக கிளம்பி சென்று விட்டார்.

இதனையடுத்து, வேண்டுமென்றே தங்களை சந்திக்க மறுப்பதாக குற்றம்சாட்டிய திமுகவினர், கலெக்டரிடம் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். ஆனால், அங்கு கலெக்டரும் இல்லாததால், திடீரென வராண்டாவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கலெக்டர் வரும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, தேர்தல் பார்வையாளர் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, அஸ்தம்பட்டிக்கு சென்று மனு அளித்தனர்.

Related Stories: