குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக கருத்தரங்கம் நடத்தும் விவகாரம்: திருச்சூரில் ஏ.பி.வி.பி-எஸ்.எஃப்.ஐ. மாணவ அமைப்பினரிடையே மோதல்!

திருச்சூர்: கேரளாவில் உள்ள கல்லூரியில் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக கருத்தரங்கம் நடத்தும் விவகாரத்தில் ஏ.பி.வி.பி-எஸ்.எஃப்.ஐ. மாணவ அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் ஸ்ரீ கேரளா வர்மா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் பா.ஜ.க. மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக கருத்தரங்கம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு இடதுசாரி எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி வளாகத்திற்குள் கருத்தரங்கை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரி வளாகத்துக்கு வெளியே சாலையோரத்தில் கருத்தரங்கை நடத்த நடவடிக்கை மேற்கொண்ட போது மோதல் வெடித்தது. ஏபிவிபி மாணவர் ஒருவரை கும்பலாக சேர்ந்து எஸ்.எஃப்.ஐ மாணவர் அமைப்பினர் விரட்டி விரட்டி தாக்கினர். இதையடுத்து அவர்களை பேராசிரியர்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்த தாக்குதலில் ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த ஒருவரும் தாக்குதலை தடுக்க முயன்ற இரண்டு பேரும் காயம் அடைந்தனர். மேலும் மாணவிகள் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடக்கின்றன. குறிப்பாக மாணவர்கள் முழுக்க இதில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இருப்பினும் ஏபிவிபி அமைப்பினர், இந்த சட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆனால் கேரளா இடதுசாரிகள் மாணவர் ஆதிக்கம் உள்ள மாநிலம். எனவே, எஸ்எப்ஐ மாணவர் அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எஸ்எப்ஐ மாணவர்கள் 4 பேரை, ஏபிவிபி மாணவர் அமைப்பினர், இன்று காலை தாக்கியுள்ளனர். இதற்கு பதிலடியாகவும் இந்த தாக்குதல் சம்பவம் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், நாடு முழுக்க மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு சூழ்நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: