சூல் என்ற நாவலுக்காக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சூல் என்ற நாவலுக்காக 2019ம் ஆண்டுக்கான விருதை எழுத்தாளர் சோ.தர்மன் பெறுகிறார். சாகித்ய அகாடமி விருது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். இதில், பரிசுத்தொகையாக 1 லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு பிரிவுகளில் எழுத்தாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில் தமிழக மாநில அளவில் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய ‘சூல்’ நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ. தர்மர் 39 வருடங்களாக தொடர்ந்து, தமிழ் இலக்கிய பரப்புகளை இயக்கி வருகிறார்.

இதுவரை 13 நூல்களை அவர் எழுதியுள்ளார். அதில் 8 சிறுகதை தொகுப்புக்கள், 4 நாவல்கள், ஒரு வில்லிசை ஆய்வு நூலை எழுதியுள்ளார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவிடுவதில் முக்கிய பங்கு வகிக்கும் சோ.தர்மன் ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவர் மறைந்த கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரிடமிருந்து ஏற்கனவே விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இவருடைய திறமைகளை கண்டு பல்கலை கழகங்கள் பல விருதுகளை வழங்கியுள்ளது. விருது குறித்து அவர் தெரிவித்ததாவது, சாகித்ய அகாடமி விருது அறிவித்து மத்திய அரசு அங்கீகாரம் தந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், நான் நடிகன் அல்ல, நான் ஒரு எழுத்தாளர். நான் சூரியகாந்தி போல் அல்லாமல் மூலிகை போல் இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: