2019ம் ஆண்டு பி.பி.சி. சிறந்த விளையாட்டு வீரர் எனும் விருதை வென்றார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்

எடின்பர்க்: 2019ம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச விளையாட்டு வீரருக்கான பி.பி.சி. விருது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பி.பி.சி. குழுமம் 1954ம் ஆண்டு முதல் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி விருதுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வரிசையில் நடப்பாண்டுக்கான பி.பி.சி. விருது இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் முறையாக உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்ததற்காக  பென் ஸ்டோக்ஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். ஸ்காட்லாந்தின் அபர்ட்டி நகரத்தில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, இந்த விருதானது தனிப்பட்ட வீரர்களுக்கான விருது. குழு விளையாட்டை சார்ந்தவன் என்றபோதும் இந்த விருதுக்கு தேர்வானதில் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சிறப்பான தருணத்தை அணியில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த விருதானது கடினமான உழைப்புக்கு தரப்பட்ட அங்கீகாரம் என கருதுகின்றேன். மேலும் விருது பெற காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகின்றேன் என தெரிவித்தார். சிறந்த விளையாட்டு வீரருக்கான வாக்கெடுப்பில் 6 முறை பார்முலா 1 கார் பந்தைய விருதை வென்ற லீவிஸ் ஹாமில்டன் இரண்டாவது இடத்தை பிடித்தார். 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்து தடகள வீராங்கனை டினா ஆஷெர் சுமித் மூன்றாவது இடம் பெற்றார். இவர்கள் இருவருக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

Related Stories: