நக்சல்கள் ஆதிக்கத்தை 20 அடி ஆழ குழியில் புதைத்தவர் மோடி : பிரசாரத்தில் அமித்ஷா புகழாரம்

பாகூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல்களை ஒழித்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உதவினார் என அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில் 4 கட்டங்கள் முடிவடைந்துள்ளன. 5ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பாகூர் தொகுதியில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் பாஜ தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தை வாஜ்பாய் அரசு உருவாக்கியது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் நக்சல்கள் ஆதிக்கத்தை 20 அடி குழி தோண்டி புதைத்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவியது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று ராகுல் காந்தியால் கூற முடியுமா? ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, ஏன் நக்சலைட்டுகள் ஒழிக்கப்படவில்லை?. ஒரு காலத்தில் ஆசியா, ஐரோப்பாவின் வர்த்தக புகலிடமாக திகழ்ந்த சாகேப்கஞ்ச் நகரில், வணிகம் செய்வதற்கான வழித்தடங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் அடியோடு அழித்து ஒழிக்கப்பட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றி ஜார்க்கண்ட்டில் நடக்கும் பிரசார கூட்டங்களில் ஏன் பேசுகிறீர்கள் என்று ராகுல் காந்தி கேட்கிறார். இத்தாலி கூலிங் கிளாஸ் அணிந்து இருக்கும் அவருக்கு, இம்மாநிலத்தை சேர்ந்த எத்தனை இளைஞர்கள் எல்லையை பாதுகாக்க போராடி ரத்தம் சிந்தினார்கள் என்பது தெரியாது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Related Stories: