குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இன்று திமுக போராட்டம்: பாஜ அரசின் கொடுங்கோன்மை சட்டத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்

* துணைபோன அதிமுக அரசுக்கு பாடம் கற்பிக்க அணி திரள மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜ அரசாங்கத்தின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால், நாடு  கொழுந்து விட்டு எரிகிறது. மத்திய பாஜ அரசு, மாநிலத்தின் அடிமை அதிமுக அரசின் துணையுடன் இதை நிறைவேற்றியிருக்கிறது. திமுக இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி தலைமையில், இளைஞரணியினர் கடந்த டிசம்பர் 13 அன்று சென்னையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் களம் கண்டனர். திமுக தலைமை அறிவித்துள்ள போராட்டம் டிசம்பர் 17  செவ்வாய்க்கிழமை (இன்று) தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது. பாஜ அரசு செய்திருக்கும் திருத்தம், 1955ல் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளாக எந்தவித பிரச்னையுமின்றி நடைமுறையில் இருந்துவரும் குடியுரிமைச் சட்டத்தில் செய்துள்ள திருத்தமாகும். இந்தியாவுக்குள் யாரெல்லாம் வரலாம். வந்தால் யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும் என்பதை இந்தச் சட்டம் வரையறுக்கிறது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நீங்கலாக மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். இந்துக்களை, கிறிஸ்தவர்களை, சீக்கியர்களை, புத்த மதத்தினரை வரவேற்கும் போது, இஸ்லாமிய சிறுபான்மையினரை எதற்காக வெறுத்துப் புறக்கணிக்க வேண்டும். இந்த மூன்று நாடுகளிலிருந்தும் இந்துக்கள் உள்ளிட்டோர் வரலாம் என்கிறபோது, இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு வாய்ப்பளிக்காமல், தடை விதித்தது ஏன் என்பது திமுக எழுப்புகின்ற மிக முக்கியமான கேள்வி. அந்த நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலையால், 30 ஆண்டுகளுக்கு முன்பாக தாய்த் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கவலை தோய்ந்த கேள்வியை முன்வைத்தே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தது.

மத்திய சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன், நாட்டை மதரீதியாகப் பிளவுபடுத்தும் பாஜவின் திட்டத்தை எதிர்த்து சங்கநாதம் போல ஆற்றிய உரை, இந்திய அரசியலின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்ல, உலக அரங்கிலும் இந்தத் திருத்த மசோதா மீதான பார்வை பதியும் அளவிற்குச் சென்றது. மாநிலங்களவையில் தீர்மானத்தை நிறைவேற்றிட பாஜவுக்குப் போதுமான பலம் இல்லாத நிலையில், திமுகவும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் இதனை எதிர்த்து வாக்களித்தனர்.ஆனால், சிறுபான்மையினர் நலனிலோ, ஈழத்தமிழர் உரிமையிலோ எப்போதுமே உண்மையான அக்கறையின்றி இரட்டை வேடம் போடுகின்ற அதிமுக தனது டெல்லி எஜமானர்களின் பாதம் பணிந்து செயல்பட்டதால் ஒரு விபரீதச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. சிறுபான்மையினருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் மாபெரும் துரோகம் இழைத்திருப்பதை, வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

தமிழகத்தில் சுமார் 70 ஆயிரம் ஈழத்தமிழர்கள், அவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 1983ம் ஆண்டு வந்தவர்கள் முதல், 2002ம் ஆண்டு வந்தவர்கள் வரை இருக்கிறார்கள். இவர்களால் மீண்டும் தங்கள் தாயகம் செல்ல முடியாத அவல நிலை இலங்கையில் தொடர்கிறது. அவர்களுக்கான குடியுரிமையைத் தான் திமுக கேட்கிறது. ஊழலில் புழுத்த புழுக்களாக ஆட்சி நடத்திக் கொண்டு, ரெய்டு-வழக்கு ஆகியவற்றை சந்தித்துக்கொண்டிருக்கும் எடப்பாடி அரசு, தங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டால் போதும் என்ற பதவி வெறியின் காரணமாக, தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் துரோகம் இழைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஈழத்தமிழர்களுக்கும் இப்போது மாபெரும் துரோகம் இழைத்துள்ளது.

மத்திய பாஜ அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 17ம்தேதி (இன்று) திமுக போராட்டக் களம் காண்கிறது. அணிதிரள்வோம். ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டென முழங்குவோம். நாடு காத்திடத் திரளுவோம். பாஜ அரசின் கொடுங்கோன்மைச் சட்டத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம். அதற்குத் துணை போன துரோக அதிமுக அரசை உள்ளாட்சித் தேர்தல் களத்தில் முறியடித்து உரிய பாடம் கற்பிப்போம். தமிழர் நலன் காக்கும் அரசமைக்க உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: