பதவியை ஏலம் விடுவதை தடுக்க பறக்கும் படை கண்காணிக்கிறது: பழனிச்சாமி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி நீங்கலாக ஏனைய 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  வரும் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து, அதற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், ஒரு சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலமிடப்படுவதாக செய்திகள் வெளியானது.  சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் வருந்தத்தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்கள் இவ்வாறு ஏலம் விடப்படுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல். இதை ஆணையம் கண்காணித்து வருகிறது.  ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுத்திட, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறது.

 மேலும், இதுபோன்ற செயல்கள் மக்களாட்சிக்கு எதிரானவை என்பதனை உணரச்செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இதுபோன்ற செயல்கள் நிகழாவண்ணம் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆணையிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி பதவிக்கு ஒரு சில இடங்களில் ஏலம் நடந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சி தலைவரே இந்த எப்ஐஆரை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையும் மாவட்ட கலெக்டர்கள் அனுப்பி வைத்துள்ளனர். தேர்தல் ஆணையத்ைத பொறுத்தவரை, தேர்தலை முழுமையாக ஜனநாயக முறைப்படி நடத்த எல்லா வகையிலும் உன்னிப்பாக செயல்பட்டு வருகிறது.ஊரக உள்ளாட்சி பதவிகளில் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த படையினருக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த படையினரில் உள்ள அதிகாரிகள்  செயல்படுவர். இந்த பறக்கும் படையினர் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து இந்த பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படை மூலம் ஊரக பதவிகளுக்கு ஏலம் விடப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பறக்கும் படை தேர்தல் முடியும் வரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதை தவிர்த்து ஒவ்வொரு ஊரக பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களும் நேரடியாக கண்காணிப்பு  பணியில் ஈடுபடுவார்கள். அவர்களும் ஏலம் விடப்படுவது தெரிய வந்தால், உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு  தகவல் அளிப்பார்கள். அப்போது உரிய முடிவு எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தவறு நடப்பதாக பொதுமக்கள் தகவல் சொன்னாலும், அது பற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு ஏலம் விடுவது போன்ற ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து இந்த பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை மூலம் ஊரக பதவிகளுக்கு ஏலம் விடப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: