சென்னை நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளை கண்காணிக்க அனைத்து துறை அடங்கிய குழு

* ஜூன் மாதத்திற்குள் கூவம் ஆக்கிரமிப்பு ஒட்டு மொத்தமாக அகற்றம்

* கமிஷனர் தகவல்

சென்னை: சென்னையில் நடந்து வரும் நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளை கண்காணிக்க அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பிறகு மொத்தம் 210 நீர்நிலைகள் இருப்பதாக சென்னை மாநகராட்சி கண்டறிந்து, அவற்றை சீரமைக்கும் பணியை தொடங்கியது. முதலில்  சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 5 குளங்கள் ₹5.95 கோடி செலவில் சீரமைக்கப்பட்டன. பின்னர், ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அந்த நிதியின் கீழ் குளங்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 52 குளங்கள் ₹18.17 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் சமூக பொறுப்பு நிதி, தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்கள் சார்பிலும் நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை கண்காணிக்க அனைத்து அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு சென்னையில் உள்ள நீர்நிலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்கரமிப்புகளை அகற்றி மறுசீரமைப்பு பணியை கண்காணிக்கும். மேலும் மீண்டும் அங்கே ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கும். இதற்கிடையில் அடையாறு, கூவம் ஆற்றங்கரை பகுதிகளில் செய்யப்பட்டு வரும் பணிகளை சென்னை மறுசீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினரும் சென்னை மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அடையாறு, கூவத்தின் கரைகள், ஆறுகளின் இணைப்பு கால்வாய்கள், அடையாறு முகத்துவாரம் மற்றும் அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா போன்ற பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார்.

பிறகு, ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டி :ஆறுகளை சுத்தமாக பராமரிப்பதும் மறுசீரமைப்பு செய்வதுமே இந்த ஆய்வின் நோக்கம். அடையாறு, கூவம், பக்கிங்காம் கரைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சென்னையின் ஆறுகளையும் நீர்நிலைகளையும் இயற்கை சூழலோடு எந்த பாதிப்புகளும் இல்லாமல் எதிர்கால தலைமுறைக்கு கொடுப்பதற்காக பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. ஆறுகளில் கழிவுநீரை விடுவதை தடுப்பதற்கான பணிகளில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஈடுபட்டு வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கழிவுநீரே இல்லாத சுத்தமான ஆறுகளாக அடையாறு, கூவம் மாறும். கூவம் ஆற்றங்கரை ஓரம் கணக்கெடுக்கப்பட்ட 14 ஆயிரம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 10 ஆயிரம் குடியிருப்புகள் அகற்றப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குள் மொத்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: