ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக 32 ஆண்டுகளாக போராடும் முதியவர்

கலசப்பாக்கம்: ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக திருமணம் செய்யாமல் வாழும் 67 வயது முதியவர் 32 ஆண்டுகளாக சட்டை போடாமல், தலைமுடி வெட்டாமல் வாழும் அவர் தற்போது மீண்டும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி(67). இவர் 1986ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது 5 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர், ஊராட்சி மன்றதலைவர் பதவியில் அமரும் வரை சட்டை போடமாட்டேன், திருமணமும் செய்து கொள்ள மாட்ேடன் என சபதம் செய்தாராம். அதேபோல் அன்று முதல் இன்று வரை சட்டை அணியாமலும், திருமணம் செய்து கொள்ளாமலும் வாழ்ந்து வருகிறார்.

தொடர்ந்து ஒவ்வொரு உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் அவர்  தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் மிக குறைந்த வாக்குகளே பெற்று, டெபாசிட் தொகையை கூட இழந்து விடுகிறாராம். என்றாலும் தனது சபதத்தை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாகவே இருந்து வருகிறார்.இதற்கிடையில் கடந்த 2006, 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மோட்டூர் ஊராட்சி பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்ததால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியவில்லை. அதன்பிறகு பொது பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்ததால்  கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுதாக்கல் செய்திருந்தார். பரிசீலனையின்போது இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உள்ளாட்சி தேர்தலும் நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சின்னத்தம்பி மீண்டும் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது: ஊராட்சி மன்றதலைவர் ஆகும் வரை சட்டை அணிவதில்லை, தலை முடி வெட்டுவதில்லை, திருமணம் செய்வதில்லை என சபதம் செய்தேன். ஊராட்சி மன்ற தலைவர் ஆன பிறகுதான் சட்டை அணிந்து கொள்வேன். தலை முடி வெட்டிக்கொள்வேன். ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்ெதடுக்கப்பட்டால் மோட்டூர் ஊராட்சிக்கு தேவையான  திட்டங்களை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். இந்தமுறை அவர் வெற்றி பெறுவாரா? அவரது சபதம் நிறைவேறுமா என்பது உள்ளாட்சிதேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போதுதான் ெதரியவரும்.

Related Stories: