ஓசூர் அருகே சானமாவு காட்டிற்கு மீண்டும் திரும்பிய யானைக் கூட்டம்: விரட்டுவதில் சிக்கல்

ஓசூர்: தேன்கனிக்கோட்டைக்கு விரட்டப்பட்ட யானைக்கூட்டத்தில் இருந்த 50 யானைகள், மீண்டும் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு வந்துள்ளன. அவற்றை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு கடந்த 12ம் தேதி விரட்டப்பட்ட 80 யானைகளில், மீண்டும் 50 யானைகள் ஓசூர் சானமாவு பகுதிக்கு திரும்பியுள்ளன. தற்போது, சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆழியாளம், கோபசந்திரம், பிள்ளைக்கொத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ராகி மற்றும் நெல் அறுவடை மும்முரமாக  நடந்து வருகிறது. இந்நிலையில், யானைகள் மீண்டும் திரும்பியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள காவேரி நகர் பகுதியில், கடந்த 15 நாட்களாக 15 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் அம்பலட்டி, பேரண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து கோஸ், புதினா உள்ளிட்ட பயிர்களை துவம்சம் செய்தன. நேற்று முன்தினம் அதிகாலை, பிள்ளைக்கொத்தூர் பகுதிக்கு இடம்பெயர்ந்த யானைகள், அங்குள்ள ஏரியில் உற்சாக குளியல் போட்டன. அந்த யானைகளை வனத்துறையினர் போராடி சூளகிரி அருகே செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்டினர்.

தற்போது, ஓசூர் மற்றும் சூளகிரி வனப்பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் ராகி, நெல் அறுவடை செய்து வரும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை தேன்கனிக்கோட்டை அடுத்த அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டுவதற்காக வனத்துறையினர் பட்டாசு, டமாரங்களுடன் விரைந்தனர். ஆனால், அந்த சமயத்தில் மழை பெய்ததால் பட்டாசு நனைந்தது. மேலும், மழையில் நனைந்து டமாரம் வலுவிழந்ததால் அதனை அடித்தும் யானைகளை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று மாலை வரை, மழை விட்டு விட்டு பெய்ததால் யானைகளை விரட்டும் முயற்சியை கைவிட்டு வனத்துறையினர் திரும்பினர்.

Related Stories: