குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது

மும்பை: குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன். இவர் தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரேதசத்தில் மின்சார வாரியச் செயலாளராக பதவி வகித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 379வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர் மத்திய அரசை குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தென் மும்பையில் உள்ள மரைன் டிரைவ் பகுதியில், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மும்பையில் வசிக்கும் அசாம், மிசோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் கண்ணன் கோபிநாதனும் கலந்து கொண்டார். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்களை கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். எனினும் கண்ணன் கோபிநாதன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் கூறுகையில், “அமைதியான முறையில் போராட்டம் நடத்த விரும்பினோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்” என்றார்.

Related Stories: