பாலியல் குற்றங்கள் விசாரணை ஆந்திரா போல் செயல்படுமா தமிழக அரசு? பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் ெவளியிட்டுள்ள அறிக்கை : தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும், வன்கொடுமைகளுக்கும் நியாயமான காலத்தில் நீதி கிடைப்பதில்லை என்ற கொந்தளிப்பு மக்களிடம் நிலவுகிறது. பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நியாயமான அவகாசத்தில் விசாரித்து முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.  பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக 2013ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி, அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட 13 அம்சத் திட்டத்தில் முதன்மையான அம்சம், பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க மகளிர் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அதன்பின் 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் இன்று வரை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை.

மேலும் பல மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இப்போது தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வேகம் போதுமானதல்ல. எனவே, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக ஆந்திரத்தில் நிறைவேற்றப்பட்டது போன்ற அம்சங்களைக் கொண்ட சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் கடலூரில் கருவுற்ற பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 மனித மிருகங்களுக்கு கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: