துறையூர் அருகே சங்கம்பட்டி பகுதி சாலையில் வாகனங்கள் எதிரில் வருவது தெரியாதபடியான ஆபத்து வளைவு

துறையூர்: துறையூர் அருகே அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் பகுதியான சங்கம்பட்டி தண்ணீர் பந்தலை ஒட்டியுள்ள யூ வடிவ சாலை வளைவை சீரமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். துறையூரில் இருந்து எரகுடி செல்லும் சாலையில் சங்கம்பட்டி கிராம் உள்ளது. இக்கிராமத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது தண்ணீர் பந்தல். இந்த தண்ணீர் பந்தலை ஒட்டியே சாலை யூ வடிவ வளைவு உள்ளதால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் ஒன்றோடு ஒன்று மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த இடம் பல உயிர்களை பலி வாங்கி உள்ளது. இந்த தண்ணீர் பந்தல் 60 வருடத்திற்கு முன்பு எரகுடி சுற்றியுள்ள கிராமங்களான பச்சப்பெருமாள்பட்டி, ஆலத்துடையன்பட்டி, மெய்யம்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதியில் இருந்து துறையூரை நோக்கி நடந்து வருபவர்களுக்கும், இருசக்கர வாகனகளில் வருபவர்களுக்கும் இந்த தண்ணீர் பந்தல் ஒரு நிழல் தரும் இடமாக அமைந்திருந்தது. அப்படி இருந்த தண்ணீர் பந்தல் தற்போது பூட்டி கிடக்கிறது.

எந்த ஒரு பயனும் இல்லாமல் இந்த கட்டிடம் உள்ளது. தற்சமயம் வாகனங்கள் அதிகமாக இந்த சாலையில் இருபுறமும் சென்று வருவதால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் இந்த தண்ணீர் பந்தல் வளைவில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பகுதி மக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கூறுகின்றனர். இதனால் இந்தத் தண்ணீர் பந்தலை உரிமை கொண்டாடுபவர்கள் இதன் பாதி இடத்தை நெடுஞ்சாலைத்துறைக்கு அளித்து விபத்தை தவிர்ப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையும் கிராம பொது மக்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இந்த தண்ணீர் பந்தலின் வளைவில் எதிரே வரும் வாகனம் தெரியும் அளவிற்கு சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க அனைத்து தரப்பு பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: