மீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர்

மயிலாடுதுறை: வெளியூர் சென்று மீன் பிடித்ததற்காக பூம்புகாரை சேர்ந்த மீனவ குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது. நாகை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன்(55). கடந்த ஆண்டு ஊர் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பஞ்சாயத்தார், லட்சுமணன் விசைப்படகில் வெளியூர் சென்று மீன்பிடி தொழில் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

வெளியூருக்குச் சென்று தொழில் செய்தால்தான் எங்களால் வாங்கிய கடனைதிருப்பிக் கட்ட முடியும் என்றுகூறி உள்ளனர். அதனால் அவரது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக தெரிவித்தனர். பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக தொழில் செய்ய வேண்டிய நிலை இருந்ததால், தொடர்ந்து மீன்பிடித்தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

இதனால் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி, கிராம பஞ்சாயத்தார் லட்சுமணன் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் ரூ.20 லட்சம் அபராதமும் விதித்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

லட்சுமணனின் மருமகள்கள் இருவர் பிஎட் படித்து வந்தனர். அவர்கள் கல்லூரிக்கு சென்றபோது ஊர் பஞ்சாயத்தை சேர்ந்த ஒருவர் அவர்களை திட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் இரண்டுபேரும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். இதுகுறித்து பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, லட்சுமணன் குடும்பத்தாரை எரித்துக்கொன்று விடுவோம் என்று காவல் நிலையத்திலேயே பஞ்சாயத்தார் மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனாலும் போலீசார் இருதரப்பினரும் சமாதானமாக பேசிவிட்டு வாருங்கள் என்று அனுப்பி விட்டனராம்.

இந்நிலையில் நேற்று சமூக ஆர்வலர் வழக்கறிஞர் சங்கமித்திரன் தலைமையில் லட்சுமணன் குடும்பத்தினர் மயிலாடுதுறை ஆர்டிஓ மகாராணியிடம் புகார் அளித்தனர். அதில் பூம்புகாரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்கள்மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் தடையின்றி மீன்பிடி தொழில் செய்திடவும், கட்டப்பஞ்சாயத்தில் போடப்பட்ட அபராத தொகை ரூ.20 லட்சத்தை ரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்டிஓ மகாராணி தெரிவித்தார்.

Related Stories: