தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்

சென்னை: தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் பதக்கங்கள் வென்றுள்ளனர். தமிழக வீராங்கனை  அர்ச்சனா 100, 200மீட்டர் ஓட்டங்களில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நேபாளம் தலைநகர்  காத்மாண்டுவில் 13வது  தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் முடிந்தது. அதில்  இந்தியா சார்பில் தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் பலர் பங்கேற்றனர். தமிழக வீராங்கனை எஸ்.அர்ச்சனா 100மீட்டர் ஓட்டப் பந்தியத்திலும், 200மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி 4X100 தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இன்னொரு தமிழக வீராங்கனை ஏ.சந்திரலேகா  4X100மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும், 200 மீட்டரில்  வெண்கலமும் வென்றுள்ளார்.  

மேலும் தமிழக வீரர்கள்  ஜே.சுரேந்தர்  100மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும், முகமது சல்லாவுதீன் மும்முறை தாண்டுதலிலும், ஆர்.சுவாமிநாதன் நீளம் தாண்டுதலிலும் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றனர். மற்றொரு தமிழக வீரர் டி.சந்தோஷ்குமார் 400மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். தெற்காசிய விிளையாட்டுப் போட்டியில்  பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகள சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தெற்காசிய விளையாட்டு போட்டியின் பதக்க பட்டியல்

ரேங்க்    நாடு    தங்கம்    வெள்ளி    வெண்கலம்    மொத்தம்

1    இந்தியா    174    93    45    312

2    நேபாளம்    51    60    95    206

3    இலங்கை    40    83    128    251

4    பாகிஸ்தான்    31    41    59    131

5    வங்கதேசம்    19    32    87    138

6    மாலத்தீவுகள்    1    0    4    5

7    பூட்டான்    0    7    13    20

Related Stories: