‘மிஸ் யூனிவர்ஸ்’ அழகி பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க பெண்

நியூயார்க்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி ‘மிஸ் யூனிவர்ஸ்’ அழகிப்பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் இந்த ஆண்டுக்கான ‘மிஸ் யூனிவர்ஸ்’ அழகிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், இந்தியா உட்பட  90 நாடுகளைச் சேர்ந்த அழகிகள்  கலந்து கொண்டனர். இறுதிப் போட்டிக்கு 10 அழகிகள் தகுதிப்பெற்றனர். இதில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி (26) ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டம் வென்றார். கடந்த ஆண்டு இப்பட்டத்தை வென்ற கட்ரியோனா கிரே, அவருக்கு வைரக்கிரீடம் சூட்டினார். தென்னாப்பிரிக்கா அழகி சோசிபினி துன்ஷி, பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மிஸ் யூனிவர்ஸ்’ என்ற அறிவிப்பிற்கு முன்னர் சோசிபினி துன்ஷியை பற்றிய முன்னுரை அறிவிப்பின்போது, பெண்களிடையே இயற்கை அழகை ஊக்குவிப்பவர், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர் என்று புகழாரம் சூட்டப்பட்டது.

Advertising
Advertising

அழகிப்போட்டியின் இறுதிச்சுற்றில் அழகிகளிடம் ஒரு கேள்வி கேட்கப்படும். இதற்கு மிக திறமையாக பதில் சொல்பவருக்குத்தான் பட்டம் கிடைக்கும். இந்த ஆண்டுக்கான போட்டியில், ‘இன்றைய இளம் தலைமுறைப் பெண்களுக்கு என்ன கற்பிக்க வேண்டும்?’’ என்று துன்ஷியிடம் கேட்கப்பட்டது. ‘பெண்களுக்கு தலைமைப் பண்பை கற்றுக்கொடுக்க வேண்டும்’ என்று சற்றும் யோசிக்காமல் பளிச்சென்று கூறியது நடுவர்களை பெரிதும் கவர்ந்தது. இதைத்தொடர்ந்தே அவருக்கு பட்டம் கிடைத்தது. தொடர்ந்து தாம் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கப்போவதாக சோசிபினி துன்ஷி தெரிவித்துள்ளார்.

Related Stories: