தமிழக அணியுடன் ரஞ்சி லீக் ஆட்டம் கர்நாடகா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 259 ரன் குவிப்பு

திண்டுக்கல்: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை ‘எலைட்’ பி பிரிவு லீக் ஆட்டத்தில், கர்நாடகா 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன் குவித்துள்ளது. என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் (4 நாள் ஆட்டம்), டாசில் வென்ற கர்நாடகா அணி கேப்டன் கருண் நாயர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். மயாங்க் அகர்வால், தேகா நிஷ்சல் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். நிஸ்சல் 4 ரன் மட்டுமே எடுத்து விக்னேஷ் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, கர்நாடகாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.அடுத்து மயாங்க் அகர்வாலுடன் தேவ்தத் படிக்கல் இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தனர். பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அகர்வால் 43 ரன் எடுத்து (78 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) சித்தார்த் பந்துவீச்சில் அபராஜித் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் கருண் நாயர் 8 ரன் எடுத்து ரன் அவுட்டாக, கர்நாடகா 88 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், தேவ்தத் படிக்கல் - பவண் தேஷ்பாண்டே இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்தது. படிக்கல் 78 ரன் (182 பந்து, 7 பவுண்டரி) எடுத்து அபராஜித் பந்துவீச்சில் மாற்று வீரர் முகுந்த் வசம் பிடிபட்டார். தேஷ்பாண்டே 65 ரன் (142 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஆர்.அஷ்வின் சுழலில் ஜெகதீசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பி.ஆர்.ஷரத் 10 ரன் எடுத்த நிலையில் சித்தார்த் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். கர்நாடக அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன் குவித்துள்ளது (94 ஓவர்). ஷ்ரேயாஸ் கோபால் 35 ரன், டேவிட் மத்தியாஸ் (0) களத்தில் உள்ளனர். தமிழக பந்துவீச்சில் சித்தார்த் 2, கே.விக்னேஷ், ஆர்.அஷ்வின், அபராஜித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

>